திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.44 திருஆமாத்தூர் பண் - சீகாமரம் |
துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.
|
1 |
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.
|
2 |
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.
|
3 |
கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.
|
4 |
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.
|
5 |
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.
|
6 |
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.
|
7 |
தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.
|
8 |
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஓப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
|
9 |
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
|
10 |
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைல்லார்க் கில்லையாம் பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.50 திருஆமாத்தூர் பண் - சீகாமரம் |
குன்ற வார்சிலை நாண ராவரி
வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.
|
1 |
பரவி வானவர் தான வர்பல
ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
சந்து காரகில் தந்து (*)பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.
(*) பம்பை என்பது ஒரு நதி.
|
2 |
நீண்ட வார்சடை தாழ நேரிழை
பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
பூண்ட கேழல்ம ருப்பரா விரி
கொன்றை வாள்வரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.
|
3 |
சேலின் நேரன கண்ணி வெண்ணகை
மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
பாலின் நேர்மொழி மங்கை மார்நட
மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
|
4 |
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும
லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.
|
5 |
ஓதி யாரண மாய நுண்பொருள்
அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர்
கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
|
6 |
மங்கை வாணுதன் மான்ம னத்திடை
வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை
பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
|
7 |
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வெண்டர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாசரன் திரள்
தோளி ருபது தான் நெரிதர
அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
|
8 |
செய்ய தாமரை மேலி ருந்தவ
னோடு மாலடி தேடி நீள்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சை
தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
|
9 |
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை
பங்க னென்றிமை யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
|
10 |
வாடல் வெண்டலை மாலை யார்த்தும்
யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
|
11 |
ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் என்பது ஆமாத்தூர் என மருவி நின்றதென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு. |
திருச்சிற்றம்பலம் |